தஞ்சையில் கடும் பனிமூட்டம்: பெரிய கோயிலின் கோபுரத்தை மறைத்த பனிப்பொழிவு..!
🎬 Watch Now: Feature Video
Published : Jan 14, 2024, 12:23 PM IST
தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் மார்கழி மாதத்தில் குளிர்காலம் தொடங்கி கடும் பனிப்பொழிவு ஏற்படுவது வழக்கம். அதேபோல, இந்த ஆண்டு, மார்கழி மாதம் பனிப்பொழிவு சற்று அதிகமாகவே இருந்தது. மேலும், மார்கழி மாதம் முடிந்து தை மாதம் பிறக்கவுள்ள நிலையிலும், தற்போது வரை சில மாவட்டங்களில் அதிகாலை 8 மணி வரை கடும் பனிப்பொழிவு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஜன.14) அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் காணப்பட்டது. தற்போது உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் அதிகாலையில் இருந்து பனி மூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதனால், தூரத்தில் இருந்து பார்க்கும் போது, தஞ்சை பெரிய கோயிலின் கோபுரங்களே தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் இருந்தது.
மேலும் நகரில் சாலைகளில் செல்லும் இருசக்கர வாகன ஒட்டிகள், தங்களது வாகனங்களின் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி சென்றனர். இதேபோல, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருவையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் வயல்வெளிகளிலும் பனிமூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இதனால், வயல் வேலைக்குச் செல்லும் விவசாயிகள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இருப்பினும், சிலரோ இதனை வரவேற்கும் விதமாக மகிழ்ச்சியுடன் தங்களது மொபைல்களில் செல்பி எடுத்தும் வீடியோ எடுத்தும் கொண்டாடடினர்.