நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 840 மி.மீட்டர் மழை பதிவு - சேரங்கோடு
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக தென்மேற்கு பருவமழை பலத்த காற்றுடன் பெய்து வருகிறது. இந்த நிலையில் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுக்காக்களை சுற்றியுள்ள பகுதிகளில் மிதமானது முதல் காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு மட்டும் இரண்டு நாட்கள் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மாவட்டத்தில் குறிப்பாக கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 14 செ.மீட்டர் மழையும், சேரங்கோடு பகுதியில் 9.6 செ.மீட்டர் மழையும், பந்தலூர் பகுதியில் 8.3 செ.மீட்டர் மழையும், அப்பர் பவானியில் 6.5 செ.மீட்டர் மழையும், கூடலூரில் 4 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் மொத்தமாக 84O மி.மீட்டர் மழையும், சராசரியாக 28.97 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், நீலகிரி மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை, கூடலூர் செல்லும் சாலையில் டி.ஆர் பஜார், பைக்காரா, நடுவட்டம் பகுதிகளில் பாதுகாப்பு கருதி அபாயகரமான மரங்களை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி வெட்டி அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
மேலும், மண்சரிவு பாதிப்புகள் ஏற்பட்டால் அப்பகுதிகளுக்கு கொண்டு செல்ல நெடுஞ்சாலை துறையினர் மூலம் மணல் மூட்டைகள் தயார் செய்யும் பணிகளையும் தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் மற்றும் நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் ஆகியோர் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதுமட்டுமில்லாமல், பாதுகாப்பு கருதி 43 பாதுகாப்பு முகாம்களும், அரக்கோணத்தில் இருந்து வந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அதிக மழை பெய்யக்கூடிய கூடலூர் மற்றும் மஞ்சூர் பகுதியில் தங்க வைக்கப்பட்டு பேரிடர்கள் ஏற்பட்டால் பொதுமக்களை பாதுகாக்க பாதுகாப்பு உபகரணங்களுடன் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர்.