ஈபிஎஸ்-க்கு குவியும் வரவேற்பு - போஸ்டர்களில் மிஸ்ஸாகும் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். புகைப்படங்கள்? - முழுசா ஜெயலலிதாவாக மாறிய ஈபிஎஸ்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-17966321-thumbnail-4x3-dpi.jpg)
புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கையில் மாபெரும் பொதுக் கூட்டம் நேற்று (மார்ச்.11) நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, புதுக்கோட்டை வழியாக திருச்சி விமான நிலையம் சென்ற அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, புதுக்கோட்டை, கட்டியாவயல் பகுதியில், வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் தலைமையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்
அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு தொண்டர்கள் படை சூழ சென்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு, மலர்மாலை, பூங்கொத்து, சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். அப்போது அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா பாணியில், தொண்டர்கள் ஒன்றன்பின் ஒன்றாக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
பொதுவாக அதிமுக விழாக்கள் என்றாலே, 'இந்தப் பூமி உள்ளவரை எங்கள் அம்மா புகழே நிலைத்திருக்கும்' என்ற பாடல் ஒலிப்பது வழக்கம். ஆனால் இந்த விழாவில், 'மக்கள் முதல்வரே வருக வருக' என எடப்பாடியின் புகழைப் பாடும் பாடலாக ஒலித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், அதிமுக பொதுக் கூட்டங்களில் வைக்கப்படும் பேனர்கள், சுவரொட்டிகளில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா உள்ளிட்டோரின் புகைப்படங்கள் இருக்கும். எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட விழாவில் வைக்கப்பட்ட பேனர்களில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லாமல் இருந்தது கட்சி சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.