தேனியில் களைகட்டிய ரேக்ளா ரேஸ்... சீறிப்பாய்ந்த காளை, காளையர்கள்! - தேனியில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்
🎬 Watch Now: Feature Video
தேனி: போடிநாயக்கனூர் அருகே எரணம்பட்டி கிராமத்தில் உள்ள கருப்பசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் தேனி, மதுரை, திண்டுக்கல், மற்றும் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டு பந்தயத்தில் சீறிப் பாய்ந்தன.
இதில் இளஞ்சிட்டு, புள்ளிமான், தட்டான் சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான் ஆகிய வகையான மாடுகள் பங்கேற்றன. 6 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில், சீறிப்பாய்ந்து குறிப்பிட்ட தூரத்தை எட்டிய மாடுகளுக்கும், ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த மாட்டு வண்டி வீரர்களுக்கும் ரொக்கப் பணம் மற்றும் கேடயம் உள்ளிட்ட பரிசுகள் விழா குழு சார்பாக வழங்கப்பட்டன.
லட்சுமிநாயக்கன்பட்டி கிராமத்தில் இருந்து இராசிங்காபுரம் சாலை வரை நடைபெற்ற இந்த போட்டியில், பந்தய தூரத்தை கடக்க மாடுகள் சீறிப்பாய்ந்தன. இரு புறம் கூடியிருந்த ஏராளமான பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் ஆரவாரம் செய்து மாட்டு வண்டி வீரர்களை உற்சாகப்படுத்தினர். திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த மாட்டு வண்டிப் பந்தயம் வெகு விமரிசையாக நடைபெற்றது.