குழந்தைகள் தின விழா: பள்ளி மாணவர்களுக்கு பிரியாணி விருந்து அளித்து அசத்திய ஆசிரியர்கள்..!
🎬 Watch Now: Feature Video
Published : Nov 14, 2023, 9:23 PM IST
திருப்பத்தூர்: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, திருப்பத்தூர் அடுத்த கசிநாயக்கன்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும், சுமார் 1500 மாணவ மாணவிகளுக்கு, பள்ளி ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் பிரியாணி விருந்து அளித்துள்ள சம்பவம் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.
முன்னதாக அப்பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளையே குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுவதன் காரணம் குறித்தும், அவரின் பெருமைகள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
அதனையடுத்து, நிகழ்ச்சியின் நிறைவாகப் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கு, தலைமை ஆசிரியர் குழந்தைசாமி மற்றும் பள்ளியில் பணிபுரியும் மற்ற ஆசிரியர்கள் ஒன்றிணைந்து, தங்களுடைய சொந்த செலவில் பிரியாணி, முட்டை மற்றும் வாழைப்பழம் என மாணவ மாணவிகளுக்குச் சிறப்பு மதிய உணவு விருந்து அளித்தனர்.
பின்னர் மாணவ மாணவிகள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, பிரியாணியை உண்டு மகிழ்ந்தனர். தாங்கள் பணி புரியும் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு தங்களுடைய சொந்த செலவில் பிரியாணி விருந்து அளித்து அசத்திய ஆசிரியர்கள் அப்பகுதி மக்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளனர்.