ஊருக்குள் புகுந்த 10 அடி நீள ராஜநாகம் மீட்பு! அடர் வனத்திற்குள் விட்ட வனத்துறையினர்! - ராஜநாகம்
🎬 Watch Now: Feature Video
Published : Nov 6, 2023, 2:17 PM IST
திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் அடுத்த பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் புலி, சிறுத்தை, யானை, கரடி உள்பட ஏராளமான வனவிலங்குகளும், அரிய வகை மூலிகை செடிகளும், ராஜநாகம் உள்ளிட்ட அரிய வகை பாம்புகளும் உள்ளன.
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நெல்லை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பாபநாசம் அருகே பொதிகையடி பகுதியில் உள்ள ரேசன் கடை அருகே சுமார் 10 அடி நீளமுள்ள அரிய வகை ராஜநாகம் ஒன்று ஊர்ந்து சென்று உள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த பாபநாசம் வனச்சரகர் சக்திவேல் தலைமையிலான வன ஊழியர்கள் ராஜநாகத்தை, பாம்பு பிடிக்கும் கருவிகள் மூலம் பத்திரமாக மீட்டனர். இதேபோல் மேட்டு தங்கம்மன் கோவில் பகுதியை சேர்ந்த ஜெயராம் என்பவர் வீட்டில் சுமார் 6 அடி நீளமுள்ள மஞ்சள் சாரை பாம்பையும் பாபநாசம் வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து மீட்கப்பட்ட 10 அடி நீளமுள்ள ராஜநாகம் மற்றும் மஞ்சள் சாரை ஆகிய 2 பாம்புகளையும் வனத்துறையினர் கோதையார் பீட் அடர் வனப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.