நிரம்பிய வைகை அணை; கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!
🎬 Watch Now: Feature Video
Published : Dec 19, 2023, 7:47 AM IST
தேனி: தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பெய்து வந்த மழையின் காரணமாக வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணைக்கு, முல்லைப் பெரியாறு அணை, வருஷநாடு மலை பகுதியில் இருந்து வரும் மூல வைகை ஆறு மற்றும் கொட்டாகுடி ஆற்றின் மூலம் நீர்வரத்து உள்ளது. இந்நிலையில், இப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக, வைகை அணையில் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், அணையிலிருந்து அதிகபடியான நீர் திறந்து விடப்படுகிறது. நேற்று காலை நிலவரப்படி வைகை அணையின் நீர் மட்டம் 66 அடியை எட்டிய நிலையில் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. ஆனால், மாலையில் அணையின் முழு கொள்ளளவான 71 அடியில், நீர்மட்டம் 68.50 அடியை எட்டிய நிலையில் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 4 மாவட்டங்களில் கனமழை பாதிப்பு: நிவாரணம் மற்றும் மீட்புப்பணிகள் குறித்து காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
மேலும், இரவு 10 மணி நிலவரப்படி வைகை அணைக்கு 12 ஆயிரத்து 336 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர் இருப்பு 5 ஆயிரத்து 463 அடியாக உள்ள நிலையில், அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர் 3 ஆயிரத்து 169 அடியாக உள்ளது.
வைகை அணையில் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றைக் கடக்கவும், அதன் அருகில் செல்லவும் வேண்டாம் என நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: "விமானப்படை மற்றும் கப்பற்படைக்குச் சொந்தமான விமானங்கள் மூலம் உணவு வழங்க ஏற்பாடு" - தலைமைச் செயலாளர்