கோவை ஒண்டிப்புதூர் நுண்ணுயிர் உரக்கிடங்கில் தீ விபத்து: காரணம் என்ன? - தீ விபத்து
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சி சிங்காநல்லூர் 57-வது வார்டுக்கு உட்பட்ட ஒண்டிப்புதூர் குப்பைக் கிடங்கில் நுண்ணுயிர் உரக்கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் உரக்கிடங்கில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உரக்கிடங்கில் இருந்து சிறிதளவில் தீ எரிந்தபோதே, அதனைப் பார்த்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
ஆனால், அதற்குள் தீ மளமளவென பரவியது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தின் காரணமாக உரக்கிடங்கில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இது குறித்து சிங்காநல்லூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இது குறித்து கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் செந்தில்குமரன், கோவை மாநகராட்சி உதவி நிர்வாக பொறியாளர் ராமசாமி, சுகாதார அலுவலர் ஜீவன்முருகதாஸ் ஆகியோரும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தகவலை அறிந்த முன்னாள் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளருமான நா.கார்த்திக், கவுன்சிலர் சாந்தாமணி உள்ளிட்டோர் நேரில் சென்று சேதத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த தீ விபத்தால் அப்பகுதியில் புகை சூழ்ந்து காணப்பட்டது. அதே சமயம் நல்வாய்ப்பாக யாரும் இல்லாத நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் உயிர்ச் சேதங்கள் தவிர்க்கப்பட்டன. மேலும் காவல்துறை விசாரணைக்கு பின்பே எவ்வாறு தீ பற்றியிருக்கக் கூடும் என தெரியவரும்.