பெருங்களத்தூரில் ஓடும் காரில் திடீர் தீ.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்! - car fire accident
🎬 Watch Now: Feature Video
Published : Dec 8, 2023, 1:21 PM IST
சென்னை: பெருங்களத்தூர் அருகே, ஜி.எஸ்.டி சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த ஓட்டுநர், காரிலிருந்து கீழே இறங்கியதால் உயிர் தப்பினார்.
சென்னை முகலிவாக்கத்தில் இருந்து, ஊரப்பாக்கம் நோக்கி கார்த்திக் என்பவர் நேற்று (டிச.07) இரவு, தனது டாட்டா காரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, கார் பெருங்களத்தூர் அருகே சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென காரின் முன் பக்கத்தில் இருந்து புகை வந்துள்ளது. இதனைக் கண்ட கார் ஓட்டுநர் கார்த்திக், காரை நிறுத்திவிட்டு காரிலிருந்து உடனே கீழே இறங்கியுள்ளார்.
இவ்வாறு ஓட்டுநர் காரிலிருந்து இறங்கிய ஒரு நிமிட நேரத்திற்குள், காரில் தீப் பற்றியுள்ளது. அதனைத் தொடர்ந்து, தீயானது மளமளவெனப் பரவி கொளுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளது. பின்னர், இது குறித்து தாம்பரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், நடு ரோட்டில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அதற்குள் கார் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இதனால் நேற்று இரவு பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கார் தீப்பற்றிய நிலையில், காரில் இருந்து ஓட்டுநர் உடனடியாக இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும், இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.