தோல் தொழிற்சாலை கழிவுகளால் பாழாகும் பாலாறு.. அதிகாரிகள் அலட்சியம் செய்வதாக விவசாயிகள் வேதனை..!
🎬 Watch Now: Feature Video
Published : Nov 5, 2023, 9:14 PM IST
திருப்பத்தூர்: ஆம்பூர், வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை கனமழை பெய்த நிலையில், வாணியம்பாடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் சில தோல் தொழிற்சாலைகள், தோல் கழிவுநீரை பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பாமல், கனமழையைப் பயன்படுத்தி பாலாற்றில் திறந்து விட்டுள்ளனர்.
இதனால் மாராப்பட்டு பாலாறு பாலத்தின் கீழ் செல்லும் பாலாறு, அதிக அளவு துர்நாற்றத்துடன் நுரை பொங்கி ஓடுவதால் அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், இந்த கழிவு நீரினால் பாலாற்றில் உள்ள சிறுவகையான மீன்கள் செத்து மிதக்கின்றன.
இதனால் பாலாறு படுக்கையை ஒட்டியுள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், நிலத்தடி நீர் மட்டம் உப்புத் தன்மையாக மாறி வருவதால் பல நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், பாலாற்றை நம்பியுள்ள விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், பாலாற்றில் தோல் கழிவுநீரைக் கலக்கக் கூடாது எனப் பல முறை அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும், இதுவரையில் பாலாற்றை மீட்டெடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல், பாலாற்றைக் கண்டும் காணாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தோல் தொழிற்சாலை கழிவு நீரினை ஆற்றிலோ, நிலத்திலோ திறந்து விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டிருக்கும் நிலையில், உத்தரவை அலட்சியப்படுத்தி சில தோல் தொழிற்சாலைகள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது.