மக்கள் இலை, தழைகளை உண்ணும் அவல நிலை ஏற்படும்..! திருவண்ணாமலையில் விவசாயிகள் நூதன போராட்டம்..! - district collectorate
🎬 Watch Now: Feature Video
Published : Oct 16, 2023, 5:26 PM IST
திருவண்ணாமலை: தமிழ்நாடு கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், உலகம் முழுவதும் உலக உணவு தினம் கொண்டாடப்படும் நிலையில் விவசாயிகளின் நிலைமை இங்கு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
மேலும், தொழில் துறையும், சேவைத் துறையும் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், எம்.எஸ்.சாமிநாதன் கமிட்டி பரிந்துரைத்த பயிர்களுக்கு உண்டான விலை நிர்ணயத்தை அமல்படுத்தாததால், 40 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலம் உருவாகி உள்ளதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
ஆகவே, வருங்காலங்களில் விவசாயிகளின் உற்பத்தி பயிர்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், பயிர் காப்பீட்டை தனியார்களிடம் அளித்ததால் விவசாயிகளுக்கு உரிய பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பயிர் உற்பத்தி குறைந்து வருவதாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து விவசாயி புருஷோத்தமன் கூறுகையில், “விவசாய நிலங்களில் வேலை செய்ய ஆட்கள் பற்றாக்குறை ஏற்படுவதால், நாளுக்கு நாள் தரிசு நிலங்கள் அதிகமாக்கிக்கொண்டு வருகிறது. எனவே, எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு, 100 நாள் வேலைத் திட்டத்தில் விவசாயப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வருங்காலங்களில் மக்கள் ஆடு, மாடுகளை போல் இலை, தழைகளை உண்ணும் அவல நிலை ஏற்படும்” எனத் தெரிவித்தார்.