விவசாய தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம்! யானையை டிராக்டர் மூலம் விரட்டிய விவசாயிகள்!
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவது தொடர் கதையாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று (அக். 29) நள்ளிரவு தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மல்லன்குழி கிராமத்தில் காட்டு யானை ஒன்று விவசாயத் தோட்டத்தில் நுழைந்து அங்கிருந்த பயிர்களை சேதப்படுத்தியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி விவசாயிகள் யானையை மீண்டும் வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும், ஆங்காங்கே தோட்டப் பகுதியில் தீ மூட்டி யானை உள்ளே வராமல் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து யானை நடமாட்ட பகுதியை கண்டறிந்து டிராக்டரை பயன்படுத்தி ஒரு மணி நேரம் போராடி யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாளவாடி மலைப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.