செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு 3 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு!
🎬 Watch Now: Feature Video
சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாகச் சென்னையில் பெய்து வரும் கன மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால், ஏரியிலிருந்து உபரி நீரானது தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது உருவாகியுள்ள புயலின் தாக்கத்தால் மழை அதிகரிக்கும் என்பதால், ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு 3 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் நீர்வரத்து குறைந்ததன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் திறப்பு 1,500 கன அடியாகக் குறைக்கப்பட்டது. ஆனால், தற்போது உருவாகியுள்ள புயலின் காரணமாக மீண்டும் உபரி நீர் திறப்பு 3 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20.74 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2,792 மில்லியன் கன அடியாக உள்ளது. மேலும், ஏரிக்கு நீர் வரத்து 2 ஆயிரத்து 800 கன அடியாக உள்ள நிலையில், இன்றும், நாளையும் மழையின் தாக்கம் அதிகரித்து, ஏரிக்கு மேலும் கூடுதல் நீர் வரும் என்பதால், ஏரிக்கு வரக்கூடிய நீரை அப்படியே வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரிநீர் மேலும் அதிகரிக்கப்பட்டு, தற்போது விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஏரியின் நீர்மட்டத்தைக் கண்காணித்துக் கூடுதலாகத் திறப்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.