இதுதானே சமத்துவ பொங்கல்..! கிறிஸ்தவ தேவாலயம் முன்பு பொங்கல் கொண்டாடிய மீனவர்கள்..! - கிறிஸ்தவ தேவாலயம் முன்பு பொங்கல்
🎬 Watch Now: Feature Video
Published : Jan 15, 2024, 12:46 PM IST
கன்னியாகுமரி: 'பொங்கல் பண்டிகை' தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தின் அடையாளமாக திகழ்ந்து வருகிறது. ஆடி மாதத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களை 'தை' மாதத்தில் அறுவடை செய்து விளைந்த புது அரிசியை கொண்டு புது பானையில் பொங்கல் வைத்து கொண்டாடுவது வழக்கம்.
இந்த விளைச்சலை கொடுத்த இயற்கைக்கும், தனக்காக உழைத்த கால்நடைகளுக்கும் நன்றி செலுத்தும் வகையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து சூரியனுக்கும், மாட்டுக்கும் படைத்து நன்றி தெரிவிக்கும் பண்டிகை தான் பொங்கல். சூரிய பொங்கல், மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என பொங்கல் பண்டிகை புத்தாடைகள் அணிந்து மகிழ்ச்சியுடன் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த பாரம்பரியமிக்க தமிழர் திருநாளை கடற்கரை கிராம மக்களும் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி அடுத்த சின்னமுட்டம் மீனவ கிராமத்தில் 'சமத்துவ பொங்கல் விழா' கொண்டாடப்பட்டது. சின்ன முட்டம் கடற்கரை கிராமத்தில் புனித தோமையார் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் 22 அன்பியங்கள் செயல்பட்டு வருகிறது.
பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை அனைவரும் புத்தாடை அணிந்து அங்குள்ள தேவாலயம் முன் ஒன்று கூடி கோலமிட்டு, கரும்பு மஞ்சள் வைத்து 22 அன்பியங்கள் சார்பாக மண் பானைகளில் சமத்துவ பொங்கலிட்டு மகிழ்ந்தனர். மேலும் உழவர் திருநாளை கொண்டாடும் இந்நாளில், உழவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கலிட்டு வருவதாக தெரிவித்தனர்.
தொடர்ந்து தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. சமத்துவ பொங்கலில் பெண்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டதோடு, ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்து கொண்டனர். பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்கு முன்பு வண்ண கோலங்கள் இட்டு, புது பானையில் பொங்கலிட்டு அதனை அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும் இயற்கைக்கும் நன்றி செலுத்தும் விழாவாக இந்த பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். நாகர்கோவிலில் பல்வேறு இடங்களில் குடும்பத்துடன் அனைவருக்கும் பொங்கல் வைத்து விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: குமரியில் மசூதி, தேவாலயங்களை குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!