தஞ்சாவூர் மாநகராட்சியில் சமத்துவ பொங்கல்.. விளையாடி மகிழ்ந்த அரசு அதிகாரிகள்..!
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர்: பொங்கல் பண்டிகை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், தஞ்சாவூர் மாநகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா இன்று (ஜன.12) கொண்டாடப்பட்டது. இதில் மாநகராட்சி மேயர் இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் மகேஸ்வரி உள்ளிட்டோர் மண் அடுப்புகளில் பொங்கல் வைத்தனர்.
பின்னர், மகளிர்க்கான இசை நாற்காலி போட்டியில், துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் மகேஸ்வரி மற்றும் பெண் கவுன்சிலர்கள் எனப் பலர் கலந்து கொண்டு விளையாடி மகிழ்ந்தனர். அதில் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி மூன்றாம் இடத்தையும், துணை மேயர் அஞ்சுகம்பூபதி இரண்டாம் இடத்தையும், கவுன்சிலர் ரம்யா சரவணன் முதல் இடத்தையும் பெற்றார்.
அதேபோல் கயிறு இழுக்கும் போட்டியில் மேயர் இராமநாதன் தலைமையில் ஆண்கள் ஒரு அணியாகவும், துணை மேயர் அஞ்சுகம்பூபதி தலைமையில் பெண்கள் ஒரு அணியாகவும் கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்றனர். இரு அணியினரும் வலுவாகக் கயிறு இழுத்தனர், அப்போது கயிற்றின் நடுவே அறுந்து, அதிகாரிகள் விழுந்தனர். இருப்பினும் விழா கொண்டாட்டத்தில் அதனை மறந்து தொடர்ந்து விளையாடினர். தொடர்ந்து கோலப்போட்டி, பானை உடைத்தல், சாக்குப் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.