திம்பம் மலைப்பாதையில் அரசுப் பேருந்தை வழி மறித்த ஒற்றை யானை! - Dhimbham
🎬 Watch Now: Feature Video
Published : Oct 11, 2023, 9:59 AM IST
ஈரோடு: திம்பம் மலைப்பாதையில் அரசுப் பேருந்தை வழி மறித்த ஒற்றை யானையால் பயணிகள் அச்சம் அடைந்தனர். சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு 20க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசுப் பேருந்து ஒன்று திம்பம் மலைப் பாதையில் வந்து கொண்டிருந்துள்ளது. அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று, பேருந்தை வழி மறித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, சாலையின் நடுவே வந்து கொண்டிருந்த யானையைப் பார்த்து அரசுப் பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி உள்ளார். ஆனால், யானை தொடர்ந்து மழையில் நனைந்தபடி பேருந்தை நோக்கி வந்துள்ளது. இதனால் யானைக்கு பயந்து ஓட்டுநர், அரசுப் பேருந்தை பின்னோக்கி சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கினார்.
இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் சிலர் கூச்சலிட்டனர். ஒரு சிலர் யானை துரத்துவதை தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர். சிறிது நேரத்துக்குப் பின் யானை பக்கவாட்டு வழியாக காட்டுக்குள் சென்றது. யானையை தாக்க முயற்சிக்கும் என்ற அச்சத்தில் பயணிகள் பதற்றத்துடன் அமர்ந்திருந்தனர். இதையடுத்து, ஓட்டுநர் பேருந்தை அங்கிருந்து இயக்கி, பயணிகளை பாதுகாப்பாக தாளவாடியில் கொண்டு சேர்த்துள்ளார்.