பலாப்பழங்களை உண்ண வந்த யானைகள்; பாதகம் ஏற்படுமோ என மக்கள் அச்சம்! - Nilgiri news
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: குன்னூர் பர்லியார் பகுதியில் அதிகளவு பலா மரங்கள் உள்ளன. தற்போது பலாப்பழ சீசன் துவங்கியுள்ளதால் இங்குள்ள மரங்களில் மிகுதியான பலாப்பழங்கள் காய்த்துள்ளன. இந்த பலாப்பழங்களை உண்பதற்காக சமவெளி பகுதியில் உள்ள காட்டு யானைகள், கூட்டம் கூட்டமாக பர்லியார் பகுதிக்கு படையெடுக்கின்றன. மேட்டுப்பாளையம் சாலையில் கடந்த சில நாட்களாகவே காட்டு யானைகள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.
அவ்வப்போது இவை வாகனங்களை வழிமறித்தும், தேயிலைத் தோட்டத்தில் தஞ்சம் புகுந்தும் வருவதால் சாலை வளைவுகளிலும், இரவு நேரங்களிலும் வாகனங்களில் பயணிப்போர் மிகவும் கவனமுடன் பயணிக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் தேயிலைத் தோட்டங்களில் இந்த யானைகள் அவ்வப்போது முகாமிடுவதால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பணிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகளும் சாலையில் அச்சத்துடனே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் இங்கு முகாமிட்டுள்ள காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என தேயிலைத் தோட்ட பணியாளர்களும், வாகன ஓட்டிகளும் வனத்துறையினரை வலியுறுத்தி வருகின்றனர். இதனால் குன்னூர் வனத்துறை வனச்சரகர் ரவீந்திரநாத், தனிப்படை குழு அமைத்து யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்து உள்ளார்.
மேலும், நெடுஞ்சாலையில் உலா வரும் காட்டு யானைக் கூட்டத்தை கண்டால் செல்போன் மூலம் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் மக்கள் யாரும் யானைகளை விரட்ட முயற்சி செய்ய வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.