சுற்றுலா காரை சூறையாடி, காரினுள் இருந்த பண்டங்களை ருசிபார்த்த யானை!
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: கோத்தகிரி - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலை, கீழ்தட்டப்பள்ளம் பகுதியில் காட்டுயானை ஒன்று ஆக்ரோஷமாக சுற்றி வந்துள்ளது. அப்போது கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற சுற்றுலா காரை, யானை தூரத்தியுள்ளது. இதனையடுத்து, காரில் இருந்த சுற்றுலாப் பயணிகள் யானையைக் கண்டு அச்சமடைந்து, காரிலிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதனை அடுத்து, அந்த காரை சேதப்படுத்திய யானை, காரினுள் இருந்த பண்டங்களை எடுத்து தின்றது.
இதனைக் கண்ட பிற வாகன ஓட்டிகள், அதனை வீடியோவாகப் பதிவு செய்தனர். சமீப காலமாக காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர் கதையாக உள்ளது. முன்னதாக மேல் தட்டப்பள்ளம் பகுதியில், காட்டு யானை ஒன்று பேருந்து கண்ணாடியை உடைத்த நிலையில், தற்போது காரை சேதப்படுத்தியுள்ளது. இதனால் அச்சமடைந்துள்ள வாகன ஓட்டிகள், இப்பகுதியில் சுற்றித் திரியும் ஒற்றை காட்டு யானையை அடர்ந்த வனப் பகுதியில் விரட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு, காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து வாகனங்களை பாதுகாப்பாகச் செல்ல அறிவுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.