திருநெல்வேலி to திருச்செந்தூர்: முதல்முறையாக மின்சார இன்ஜினுடன் பயணிகள் ரயில் இயக்கம் - செய்துங்கநல்லூர் ரயில் நிலையம்
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் வரையிலான அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் கடந்த 3 வருடங்களாக நடந்து வந்தது. இந்தப் பணிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முழுமையாக நிறைவடைந்தன. பணிகள் நிறைவடைந்த பின்னர், மின்சார இன்ஜின் பொருத்தி சோதனை ஓட்டம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்தது.
இதற்கு முன்பு வரை 70 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்ட ரயில் மின் மயமாக்கப்பட்ட பின்னர், 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், இன்று (மார்ச்.29) முதல் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பயணிகள் ரயில் மற்றும் செந்தூர் எக்ஸ்பிரஸ், பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் என அனைத்து ரயில்களும் மின்சார இன்ஜின் பொருத்தி சென்றது. முதன்முதலாக இன்று மின்சார இன்ஜின் பொருத்தி திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி பயணிகள் ரயில் சென்றது.
இந்தப் பயணிகள் ரயிலுக்கு ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் ஊர்மக்கள் ரயில் ஓட்டுநர்களுக்கு மற்றும் ரயில் நிலைய அதிகாரிக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தி ரயிலை வரவேற்றனர். இந்த தடத்தில் மின்சார ரயிலாக இயக்கப்பட்ட பின்னர், வேகம் கூடுவதால் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் நேரம் 1 மணி 10 நிமிடத்திற்குள் சென்றடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.