"தீபாவளி போல் மதுரை மாநாட்டுக்கு மக்கள் வர உள்ளனர்" முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேட்டி! - எம் ஜி ஆர் மன்ற உறுப்பினர்கள்
🎬 Watch Now: Feature Video
பொள்ளாச்சி: அதிமுக சார்பில் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள மாநாட்டையொட்டி கோவை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் பொள்ளாச்சி அருகே உள்ள ஆட்சிபட்டியில் தனியார் மைதானத்தில் பொதுமக்களை வரவேற்கும் விதமாக விளம்பர ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ராட்சத பலூன் பறக்க விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக போலீசார் அனுமதி மறுத்ததால் அதிமுகவினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் போலீசார் அனுமதி அளித்ததை அடுத்து மாநாடு குறித்த விளம்பர ஸ்டிக்கர் ஒட்டிய ராட்சத பலூன் பறக்க விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் தாமோதரன் மற்றும் எம்.ஜி.ஆர் மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு மிகப்பெரிய ராட்சத பலூனை பொது மக்கள் பார்வைக்காக வானில் பறக்க விட்டனர்.
இதனையடுத்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேசும் போது, வரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தமிழகத்திற்கு முதலமைச்சராக வருவார் எனவும், தமிழகத்தில் திமுக ஆட்சி சரியில்லாததால் தமிழக மக்கள் அதிமுக மாநாட்டுக்கு தீபாவளி போன்று திரண்டு வர உள்ளதாகவும் தெரிவித்தார்.