"தனி மனிதனை கண்டு பெரும்பான்மை அஞ்சுகிறதா?" - துரைமுருகன் கேள்வி!
🎬 Watch Now: Feature Video
வேலூர்: வேலூரில் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது, நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளில் பூத் கமிட்டி பட்டியல் தயாரிப்பதுடன் நாடாளுமன்ற தேர்தல் ஆரம்ப கட்ட பணியை தொடங்குவது, திமுகவில் 2 கோடி உறுப்பினர் சேர்க்கை முகாமை வெற்றி பெற செய்வது, ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டு அதிக வாக்குகள் பெற்றுத் தந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது மற்றும் மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், "குற்றத்தின் அடிப்படையில் இந்த நிகழ்வு நடந்ததாக யாரும் கருதவில்லை. நீண்ட நாள் வழக்கு நடந்து அதற்கு பிறகு அவருக்கு தரப்பட்ட அவகாசத்தின் படி மேல் முறையீட்டுக்கு செல்லும் வாய்ப்பு இருக்கிறது. நீதிமன்றமே அப்படி போகலாம் என்ற கதவை திறந்து விட்டுள்ளது. ஆனால், அந்த வாய்ப்பை அவர் பயன்படுத்தும் முன்பாகவே, அவசர அவசரமாக அவருக்கு இப்படி ஒரு தண்டனையை வழங்கி இருப்பது ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல.
ஒரு மாபெரும் நாட்டை ஆளும், மாபெரும் மெஜாரிட்டியுடன் ஆண்டு கொண்டிருக்கும் ஒரு கட்சி, ஒரு தனி மனிதனை கண்டு அஞ்சுகிறதோ என்ற கருத்து அரசியல் நோக்கர்களுக்கு ஏற்படுகிறது. ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு இந்த முறை கண்டிப்பாக ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும். இந்த முறை படுக்கைக்கு அடியில் வைத்திருக்க முடியாது" என்றார்.