சிறு மழைக்கே தாங்காத குடியிருப்பு பகுதி - கருப்பு கொடி கட்டி ஊராட்சி நிர்வாகத்திற்கு மக்கள் கண்டனம்! - protest by raising black flag at Tiruvannamalai
🎬 Watch Now: Feature Video
Published : Dec 4, 2023, 5:51 PM IST
திருவண்ணாமலை: செங்கம் அடுத்த அந்தனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்செங்கம் துரிஞ்சாபுரம் பகுதி மக்கள் பல மாதங்களாக சரியான சாலை வசதி இன்றி தவித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி தெருக்கள் சேரும் சகதியுமாய் மாறியுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அதனை கண்டித்து அப்பகுதி பொது மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின் தகவல் அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் ஆய்வு மேற்கொண்டு சிமெண்ட் சாலை அமைக்க ஆணை வழங்கியுள்ளார். இருப்பினும் தற்போது வரை சிமெண்ட் சாலை அமைக்கப்படாமல் இருப்பதால் சிறிது மழை பெய்தால் கூட சாலை சேறும் சகதியுமாக மாறிவிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
சிமெண்ட் சாலை அமைக்குமாறு ஆணை வழங்கியும் அதனை பொருட்படுத்தாமல் அலட்சியம் காட்டி வருவதை கண்டித்து பொது மக்கள் இன்று தெருவில் கருப்பு கொடி கட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
பின்னர் அங்கு வந்த மேல்செங்கம் காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் மாவட்ட நிர்வாகம் விரைந்து அப்பகுதிக்கு சிமெண்ட் சாலை அமைத்திட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.