தேனி மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் நாய்கள்..நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்?
🎬 Watch Now: Feature Video
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே காணவிளக்கு பகுதியில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக தேனி மாவட்டத்திலிருந்து மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா மாநிலத்தில் இருந்தும் மக்கள் அதிகம் வந்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு, மகளிர் பிரசவ வார்டு, குழந்தைகள் பராமரிப்பு பிரிவு, புற நோயாளிகள் பிரிவு, என பல பிரிவுகள் இங்கு உள்ளன. இங்கு தினமும் சிகிச்சை பெறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் வந்து செல்லக்கூடிய அரசு மருத்துவமனையாக திகழ்கிறது. இந்நிலையில் இந்த மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிவதால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
மேலும், அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு முன்பும் சுற்றித் திரியும் ஏராளமான நாய்களால் அப்பகுதி முன்பு செல்லும் பொதுமக்கள் அச்சம் அடைந்திருக்கின்றனர். இந்த மருத்துவமனை வளாகத்தில் கூட்டம் கூட்டமாக 20க்கும் மேற்பட்ட நாய்கள் ஒன்றோடு ஒன்று சுற்றித் திரிந்தும், சண்டையிட்டும், குரைத்து கொண்டும் பொதுமக்களை அச்சப்படுத்துகிறது. எனவே கூட்டம் கூட்டமாக சுற்றி பொது மக்களை அச்சுறுத்தி வரும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:போலந்து நாட்டில் மோசமான வானிலையின் காரணமாக விமான விபத்து - 5 பேர் உயிரிழப்பு!