கோவையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுகவினர் போராட்டம்.. - தளபதி முருகேசன்
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட்டை ரத்து செய்யக்கோரி, மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் நீட் தேர்வுக்கான ரத்து குறித்து இன்றளவும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால், பல்வேறு இடங்களில் திமுக உள்பட பல்வேறு கட்சியினர், ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் மாணவர்களும் கண்டன போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த அனிதா மற்றும் அண்மையில் உயிரிழந்த ஜெகதீசன் ஆகியோரது மரணம் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யும் வரை தொடர்ந்து அதனை வலியுறுத்திக் கொண்டே இருப்போம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட பல்வேறு அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை சிவானந்த காலனி பகுதியில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவர் அணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், ஒன்றிய அரசை கண்டித்தும், தமிழ்நாடு ஆளுநரை கண்டித்தும் இன்று (ஆகஸ்ட் 20) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
திமுக மாநகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள திமுகவினர், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தும் பதாகைகளையும், நீட் தேர்வினால் உயிரிழந்த அனிதா மற்றும் ஜெகதீசன் ஆகியோரின் புகைப்படங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்தியும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.