இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த கட்சி திமுக;அமித்ஷா கருத்து ஏற்புடையதல்ல - துரைமுருகன் குற்றச்சாட்டு! - ஜவுளித்துறை அமைச்சர் ஆர் காந்தி
🎬 Watch Now: Feature Video
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் பாரதி நகரில் உள்ள தனியாருக்குச் சொந்தமான விடுதியில் திமுகவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ராணிப்பேட்டை அடுத்த அக்ராவரம் மற்றும் லாலாபேட்டை ஆகிய இரு கிராம எல்லை பிரச்னையைத் தீர்க்கும் விதமாக, அப்பகுதியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களுடன் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட முக்கியப் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், ‘இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த கட்சி திமுக என்ற அமித் ஷாவின் கருத்து அவரது தரத்திற்கு உகந்த பேச்சு அல்ல’ எனத் தெரிவித்தார். திமுகவின் மீது சேற்றை வாரி, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பாஜகவினர் வீசி வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்தார்.
அப்படி பார்த்தால் அவர்களது கட்சியில் எத்தனை பேர் ஊழல் செய்திருக்கிறார்கள் என பட்டியல் போட்டு தர தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர் 'பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நடைபயணம் குறித்த கேள்விக்கு அது பற்றி எல்லாம் எனக்கு தெரியாது' என நகைச்சுவையாக பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.