புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டி - power lifting
🎬 Watch Now: Feature Video
புதுக்கோட்டை: அமெச்சூர் பளு தூக்கும் சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சீனியர் ஆண்கள் மற்றும் பெண்கள், ஜூனியர் ஆண்கள் கலந்து கொண்ட மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டி (weightlifting competition) புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று (ஜூலை 2) நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு உடற்பயிற்சி கூட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
சீனியர் ஆண்களில் 11 பிரிவும், ஜூனியர் ஆண்களில் இரண்டு பிரிவும், சீனியர் பெண்களில் ஒரு பிரிவு என 14 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியை புதுக்கோட்டை மாவட்ட அமெச்சூர் பளு தூக்கும் சங்க சேர்மனும், தொழிலதிபருமான முருகானந்தம் தொடங்கி வைத்தார். நேற்று மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு சங்க மாவட்ட தலைவர் பிரேம்குமார் தலைமை வகித்தார்.
14 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற பளு தூக்கும் வீரர்களுக்கு பதக்கம், பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் எம்ஆர்எம் கல்வி நிறுவன தாளாளர் முருகப்பன், தொழிலதிபர்கள் மதன்குமார், காஜா முகமது, ராமதெய்வீகம், புதுக்கோட்டை மாவட்ட வலு தூக்கும் சங்க தலைவர் மூர்த்தி, புதுக்கோட்டை மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்க செயலாளர் கிருஷ்ணா முனி, தமிழ்நாடு அமெச்சூர் பளு தூக்கும் சங்க செயற்குழு உறுப்பினர் பாக்யராஜ், பாஜக வர்த்தக அணி துணைச் செயலாளர் வீரன் சுப்பையா ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.
ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வின்னர் கோப்பையையும் புதுக்கோட்டை விநாயகா உடற்பயிற்சி கூடம் தட்டிச் சென்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட அமெச்சூர் பளு தூக்கும் சங்க செயலாளர் பாஸ்கரன், இணை செயலாளர்கள் தனபால், பரமசிவம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியை யூஜின் ஜிம் & பிட்னஸ் ஜனார்த்தனம் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உடற்பயிற்சி கூட ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.