Video: மயங்கி விழுந்த மனநலம் பாதித்த பெண்.. தாயுள்ளத்துடன் உதவிய பெண் போலீஸ்! - தாயுள்ளத்துடன் உதவிய பெண் போலீசார்
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரின் மேற்கு ரதவீதி பகுதி வழியாக நடந்து சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனைக் கண்ட அவ்வழியாக வந்த போக்குவரத்து பெண் காவலர் மயங்கி விழுந்த மனநலம் பாதிப்படைந்த பெண்ணுக்கு உதவி செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
திண்டுக்கல் போக்குவரத்து காவல் துறையில் காவலராக பேபி என்பவர் பணி செய்து வருகிறார். இவர் மாநகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்தைச் சீர் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (ஏப்.17) தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, திண்டுக்கல் மேற்குரத வீதியில் உள்ள மாநகராட்சி பள்ளி அருகில் கடுமையான வெயிலின் தாக்கம் இருந்ததால் தள்ளாடியபடி, அவ்வழியாக நடந்து வந்த மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண்மணி திடீரென மயங்கி விழுந்தார்.
இதைக் கண்ட, பெண் காவலர் பேபி, உடனடியாக அங்கு இருந்தவர்கள் உதவியுடன் அந்த மனநிலைப் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு முதலுதவி அளித்ததோடு அவருக்கு ஆடைகள் வாங்கி அணிவித்து, அவரை சுத்தம் செய்து தண்ணீர் கொடுத்து உதவி செய்தார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி மனிதாபிமானத்துடன் செயல்பட்ட போக்குவரத்து பெண் காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.