காவிரியில் நீர் திறக்க தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.. தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி. வெங்கடேஸ்வரன் கோரிக்கை! - dharmapuri news
🎬 Watch Now: Feature Video
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (ஜூலை 4) நீர்வரத்து 400 கன அடியாக குறைந்துள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு ஒகேனக்கல் பகுதி, முதலைப்பண்ணை பகுதியில் இருந்து ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.
காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் பகுதிகளுக்கு தண்ணீர் வராததால், அதிகாரிகள் மணல் மூட்டையை அடுக்கி ஆற்றின் தண்ணீர் பாதையை மாற்றி, தண்ணீரை சுத்திகரித்து தருமபுரி - கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு தடையின்றி வழங்கி வருகின்றனர்.
நீர் வரத்து குறைந்ததன் காரணமாக இரண்டு மாவட்ட மக்களுக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து பேசிய பாமகவைச் சோ்ந்த தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பி. வெங்கடேஸ்வரன், 'தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக செல்லும் காவிரி ஆற்றில் வருடம் தோறும் இம்மாதம் அதிக அளவிலான தண்ணீர் வரும். தற்பொழுது இந்த ஆண்டு 400 கன அடியாக தண்ணீர் குறைந்த அளவு வருகிறது.
தருமபுரி - கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்னையைத் தீர்க்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் தண்ணீர் வராததால், மணல் மூட்டைகளை ஆற்றின் குறுக்கே அடுக்கி தண்ணீர் திருப்பிவிடப்பட்டு சுத்திகரித்து வழங்கப்பட்டு வருகிறது.
நீர் வரத்து மேலும் குறைந்தால் தருமபுரி - கிருஷ்ணகிரி மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் குடிநீர் கிடைக்காத அபாயம் ஏற்படும். தமிழக அரசு உடனடியாக மத்திய அரசிடம் வலியுறுத்தி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீரை உடனடியாக திறந்து தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.