கிணற்றில் விழுந்த குட்டி யானை முதுமலைக்கு வருகை - பாசத்துடன் வரவேற்ற பொம்மன்!
🎬 Watch Now: Feature Video
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள கோடுபட்டி என்னும் கிராமத்தில் கடந்த மார்ச் 11ஆம் தேதி, யானைக் கூட்டத்தில் இருந்து பிரிந்த குட்டி யானை ஒன்று கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதனையடுத்து நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்னர், வனத்துறையினர் குட்டி யானையை பத்திரமாக மீட்டனர்.
தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக யானையைப் பாதுகாத்து வந்த வனத்துறையினர், குட்டி யானையை அதனுடைய தாயிடம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. எனவே, நீலகிரி மாவட்டம், முதுமலை யானைகள் முகாமிற்கு யானை குட்டியைக் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில், குட்டி யானை முதுமலைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த குட்டி யானையை "தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் " ஆவணப்பட புகழ் பொம்மன், பெள்ளி ஆகிய இருவரிடம் ஒப்படைக்கப்பட்டு, குட்டி யானை பராமரிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், மீட்கப்பட்ட குட்டி யானையை வளர்ப்பதில் தங்களுக்கு மீண்டும் பெருமை என பொம்மன், பெள்ளி தம்பதியினர் உளமாற தெரிவித்தனர்.
மேலும் நீண்ட தூரம் பயணித்து வந்ததால் சோர்வடைந்த குட்டி யானைக்கு, வன கால்நடை மருத்துவர்கள் பால் உள்பட உணவுகளை கொடுத்து கண்காணித்து வருகின்றனர். முன்னதாக தாய் யானையை தேடிய ஒரு வார கால இடைவெளியில், குட்டி யானையைப் பராமரித்து வந்த வன ஊழியர் மகேந்திரன், நேற்று (மார்ச் 16) குட்டி யானையை அழைத்துச் சென்றபோது கண்ணீருடன் வழியனுப்பி வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.