தாராபுரம் அருகே டீக்கடையில் லாரி புகுந்து விபத்து - 3 பேர் உயிரிழப்பு! - tirupur news
🎬 Watch Now: Feature Video
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் அருகே உள்ள சூரியநல்லூர் பகுதியில் கலாமணி என்பவர் சாலையோரத்தில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், இன்று காலை திருச்சியில் இருந்து சிமெண்ட் கலவை லோடு ஏற்றிய லாரியை ரத்தின குமார் என்பவர் திருப்பூர் நோக்கி ஓட்டி வந்துள்ளார்.
லாரி சூரியநல்லூர் பகுதியில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கலாமணியின் டீ கடையில் புகுந்துள்ளது. இதில் கடையில் பணியாற்றி வந்த முத்துச்சாமி (65) மற்றும் டீ அருந்திக் கொண்டிருந்த தோழன் (70) ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.
லாரி ஓட்டுநர் ரத்தின குமார் உள்பட 5 பேர் படுகாயத்துடன் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குண்டடம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் லாரியை டீக் கடையில் இருந்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லாரி ஓட்டுநர் ரத்தின குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேர் பலத்த காயமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.