பாதுகாப்பு அச்சுறுத்தல்! சொந்த ஊர்களுக்கு திரும்பும் வட மாநில தொழிலாளர்கள் - கதறும் தொழிற்சாலை உரிமையாளர்கள்! - சொந்த ஊர்களுக்கு திரும்பும் வட மாநிலத்தவர்கள்
🎬 Watch Now: Feature Video
கோவை: உத்திரபிரதேசம், ஜார்கண்ட், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த வட மாநில தொழிலாளர்கள் கோவையில் உள்ள பஞ்சாலைகள், சிறு குறு தொழிற்சாலைகள், உணவகங்கள், கட்டுமான பணி என பல்வேறு பணிகளில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் வட மாநில தொழிலாளர்களை துன்புறுத்துவதாகவும், தாக்கப்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியாகி வைரலானது.
இதனால், தங்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊரை நோக்கி செல்ல துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கோவையில் தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தினர் (சைமா) நேற்று (மார்.4) செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது அவர்கள் கூறியதாவது, "பஞ்சாலை தொழிற்சாலைகளில் 60% வடமாநிலத்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தியினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதனால் தொழிற்சாலைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், வட மாநில தொழிலாளர்களுக்கு தங்களது தொழிற்சாலைகளில் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விதமான வசதிகள் உள்ளன. சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என இந்தி மொழியில் பேசி வட மாநிலத்தவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அத்துடன், வட மாநிலங்களில் தொழில் நிறுவனங்கள் துவங்கப்படுவதால் இன்னும் நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் வட மாநிலத்தவர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு செல்லவார்கள்" என்று தெரிவித்தனர்.
அண்மையில் ஓடும் ரயிலில் வட மாநில இளைஞர்களை, தமிழ் பேசும் இளைஞர் ஒருவர் மூர்க்கத்தனமாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அந்த நபரை தேடப்படும் குற்றவாளியாக சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல்துறையினர் அறிவித்து அவர் குறித்து தகவல் அளிப்போருக்கு சன்மானமும் வழங்குவதாக அறிவித்தனர்.
இதனையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மகிமைதாஸ் என்ற அந்த இளைஞரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.