கோவை அருகே டாஸ்மாக் ஷட்டரை உடைத்து உயர்ரக மது பாட்டில்கள் திருட்டு! - Coimbatore Tasmac Theft
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/08-07-2023/640-480-18945570-thumbnail-16x9-tasmac.jpg)
கோயம்புத்தூர்: மாவட்டம் சூலூர் அடுத்த செஞ்சேரி பிரிவு பகுதியில் 2267 என்ற எண் கொண்ட டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை இக்கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் கடையை ஆய்வு செய்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நேற்று நள்ளிரவு டாஸ்மாக் கடைக்கு வந்த மர்ம நபர்கள் சிலர் கல் மற்றும் கம்பியை கொண்டு ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து மது அருந்திவிட்டு ஏராளமான உயர் ரக மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்றதும், அடையாளம் தெரியாமல் இருக்க சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க் உள்ளிடவற்றை திருடி சென்றதும் தெரிய வந்தது.
எவ்வளவு பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் டாஸ்மாக் ஊழியர்கள் கணக்கெடுத்து வருகின்றனர். சம்பவம் வழக்கு பதிவு செய்த சுல்தான் பேட்டை போலீசார் மது பாட்டில்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.ஏற்கனவே சூலூரில் 2 டாஸ்மாக் கடைகளில் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறிய நிலையில் தற்போது மேலும் ஒரு டாஸ்மாக் கடையில் மர்ம நபர்கள் கைவரிசையை காட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகையில் இரவு 10 மணிக்கு மேல் கடையை பூட்டி விட்டு சென்று விடுவதால் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் போலீசார் கூடுதல் ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் இரவில் ரோந்து பணி மேற்கொண்டால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க :Trichy Airport: திருச்சி விமான நிலையத்தில் 1.3 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்!