தேசிய அளவிலான திருநங்கைகள் அழகி போட்டி: கோவை பிராக்சி 3ம் இடம் பிடித்து அசத்தல்!
சென்னை: டெல்லியில் இந்திய அளவிலான அழகி போட்டி (miss transqueen india) திருநங்கைகளுக்காக நடைபெற்றது. இந்த அழகி போட்டியில் தமிழ்நாடு சார்பாகக் கோயம்புத்தூரைச் சேர்ந்த பிராக்சி என்ற திருநங்கை பங்கு பெற்று, மூன்றாம் இடத்தை பிடித்தார். பின்னர், பிராக்சி டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
அப்போது, பிராக்சியை வரவேற்கும் வகையில் சக திருநங்கைகள் சென்னை விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தனர். பின்னர், செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில், பிராக்சி கூறியதாவது,"நான் தற்போது தனியார் பல்கலைக்கழகத்தில் துணை ஆசிரியாக பணியாற்றி வருகிறேன். பல்வேறு இடங்களில் திருநங்கைகளுக்கு முறையான இடம் கிடைப்பதில்லை. அழகு போட்டி என்பது ஒரு அழகுக்கான போட்டி இல்லை, அது ஒரு திறமைக்கான போட்டி. இந்த அழகி போட்டியில் நான் கற்றுக் கொண்டது, இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள திருநங்கைகளின் வாழ்வாதாரம் எப்படி இருக்கிறது என்பது தெரிந்து கொண்டேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "திருநங்கைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு போன்ற இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்திய அளவிலான ஆணழகன் போட்டி நடத்த வேண்டும் என கேள்வியை முன்வைத்துள்ளேன். இந்த வெற்றியை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல நினைக்கின்றேன். திருநங்கைகளுக்கு அரசு முறையான வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும். இந்த போட்டியில், 15 திருநங்கைகள் கலந்து கொண்டர். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் ஒவ்வொரு திருநங்கைகள் கலந்து கொண்டனர். எல்லோருக்கும் கஷ்டம் இருக்கிறது. ஆனால், திருநங்கைகளுக்கு அதிகமாக இருக்கிறது. திருநங்கைகளுக்குக் கல்வி வேலைவாய்ப்பு கிடைத்தால் எல்லாம் மாறும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழர்கள் இல்லாத சிஎஸ்கே அணியை தடை செய்க - சட்டப்பேரவையில் பாமக எம்எல்ஏ கோரிக்கை