கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பூ கொடுத்து வரவேற்ற சீனியர்கள்! - இளநிலை முதலாம் ஆண்டு
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர் : தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கை கடந்த மே 8 ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வந்தது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இன்று முதல் அரசு கலை கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்குகின்றன.
அதன்படி கோவையிலும் அரசு மருத்துவமனை அருகிலுள்ள அரசு கலைக்கல்லூரி, தொண்டாமுத்தூர் அரசு கலை கல்லூரி, புலியகுளம் அரசு கலை கல்லூரி ஆகியவற்றில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் அரசு மருத்துவமனை அருகில் உள்ள அரசு கல்லூரிக்கு முதல் நாள் வருகை புரிந்த மாணவர்களுக்கு சீனியர் மாணவர்கள் ரோஜா பூ, சந்தனம், பன்னீர் தெளித்து வரவேற்பு அளித்தனர்.
மேலும், மாணவர்களுடன் வந்த பெற்றோர்களையும் அன்புடன் வரவேற்றனர். முதலாம் ஆண்டு மாணவர்கள் அவர்களில் வகுப்புகளை கண்டறிய ஆங்காங்கே அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டிருந்தன. இக்கல்லூரியில் இளநிலை முதலாம் ஆண்டில் 1626 இடங்களில் 1494 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள இடங்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் இன்று முதல் 7ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க :படிக்கும் பள்ளியில் கழிவறை கூட இல்லை: திருவண்ணாமலை அருகே பள்ளி மாணவர்கள் போராட்டம்!