தமிழ்நாட்டில் கொட்டப்பட்ட கேரள கோழிக்கழிவுகள்.. மீண்டும் அள்ள வைத்த பொதுமக்கள் - Chicken wastage in coimbatore
🎬 Watch Now: Feature Video
சமீப காலங்களாக கேரளாவில் இருந்து எடுத்து வரும் கோழி உள்ளிட்ட இறைச்சிக் கழிவுகளை, தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளில் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் கொட்டிச் செல்வதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
அதேநேரம், இது குறித்து எழுந்த புகார்களின் அடிப்படையில், காவல் துறையினரும் இரவு நேரங்களில் ரோந்துப் பணிகளைத் தீவிரபடுத்தி உள்ளனர். இந்த நிலையில் கேரளாவில் இருந்து மினி ஆட்டோ மூலம் கோழிக் கழிவுகளை ஏற்றி வந்த அடையாளம் தெரியாத நபர்கள், வாளையாறு எல்லை நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே கொட்டி உள்ளனர்.
இதனைக் கண்ட உள்ளூர் இளைஞர்கள் இது குறித்து கேட்டபோது, அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டி உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து ஊர் மக்களையும் அழைத்து, சட்ட நடவடிக்கை எடுப்பதாகக் கூறி எச்சரிக்கை செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அந்த நபர்கள் மீண்டும் கோழிக் கழிவுகளை அள்ளி ஆட்டோவில் எடுத்துச்சென்றுள்ளனர். இதனிடையே கே.ஜி.சாவடி காவல் துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில், அங்கு வந்த காவல் துறையினர், ஆட்டோவில் கோழிக் கழிவுகள் எடுத்து வந்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.