ஓசி மது கேட்டு டாஸ்மாக்கில் ரகளை.. இணையத்தில் வைரலாகும் இளைஞர்கள் வீடியோ!
திருநெல்வேலி: சேரன்மகாதேவிலிருந்து பத்தமடை செல்லும் வழியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த கடையில், நேற்றிரவு இரு மதுபிரியர்கள் இலவசமாக மது கேட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மதுபான கடை ஊழியர்கள் இலவசமாக மது தர முடியாது என்று கூறியுள்ளனர். இதைதொடர்ந்து மதுபிரியர்க்கும், கடை ஊழியர்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த மதுபிரியர் ஒருவர் திடீரென கடையின் ஜன்னல் கதவை வேகமாக அடைத்து உடைத்துள்ளார்.
அப்போது அவருடன் வந்த மற்றொரு நபர் ஜன்னல் வழியாக கையை விட்டு மது பாட்டிலை எடுத்து தப்பியோட முயன்றுள்ளார். உடனடியாக, கடை ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து திருடும் நபரை கையும் களவுமாக பிடித்தனர். மேலும், மற்றொரு நபர் உடைந்த கண்ணாடி துண்டை வைத்து ஊழியரைத் தாக்கும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து மது கடை ஊழியர்கள் இரண்டு நபர்களையும் பிடித்து சேரன்மகாதேவி போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் இவர்கள் மேலச்செவல் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்( 33) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கருத்தபாண்டி(25) என்பது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். மேலும், இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.