சக்கராப்பள்ளி சப்தஸ்தான பெருவிழாவில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி... 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு! - சக்கராப்பள்ளி சப்தஸ்தான விழா
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே பாபநாசம் வட்டம் சக்கராப்பள்ளி தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் திருக்கோயில் சப்தஸ்தான பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, கண்ணாடி பல்லாக்கில் வீதியுலா வரும் சுவாமிக்கு ‘பொம்மை பூ போடும் நிகழ்வு’ வாண வேடிக்கையுடன் கோலாகலமாக நடைபெற்றது.
சப்தஸ்தான பெருவிழா கடந்த மார்ச் 26 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது ஏப்ரல் 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி பல்லக்கில் உற்சவர் சுவாமி, அம்மன் எழுந்தருளி வழுத்தூர், சரபோஜிராஜபுரம், அரியமங்கை, நல்லிச்சேரி, சூலமங்கலம், பசுபதிகோயில், இலுப்பக்கோரை ஆகிய ஏழு ஊர்களுக்குச் சென்று பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
இரவு கைலாய வாந்தியங்கள் முழங்க, இலுப்பக்கோரை கிராமம், குடமுருட்டி ஆற்றங்கரையில் கண்களை கவரும் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து, இலுப்பக்கோரையிலிருந்து சக்கராப்பள்ளி கோயிலுக்கு புறப்பட்ட பல்லக்கு அய்யம்பேட்டை வந்தடைந்தது. அய்யம்பேட்டையில் அழகு நாச்சியம்மன் கோயில் முன்பு விழாவின் முக்கிய நிகழ்வான சுவாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்வு நடைப்பெற்றது.
கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி காட்சித் தந்த சக்கர வாகேஸ்வரருக்கு கிருஷ்ணன் பொம்மை பூ மாலை போட்டது. இக்கண்ணாடி பல்லக்கை பக்தர்களே சுமந்து ஏழு ஊர்களுக்கு வலம் வந்தனர். வாண வேடிக்கையுடன் நடந்த இந்த நிகழ்வினை 18 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
சப்தஸ்தான பல்லாக்கு பெருவிழா, பொம்மை பூ போடும் நிகழ்வினை முன்னிட்டு, தஞ்சை சரக டிஐஜி ஜெயச்சந்திரன் நேரடி மேற்பார்வையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் தலைமையில், பாபநாசம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் பூரணி, அய்யம்பேட்டை ஆய்வாளர் வனிதா உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமலும், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படிங்க: அதிமுக மாஜி எம்.பி மைத்ரேயன் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்!