வேகமாக சரியும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம்.. விவசாயிகள் கவலை! - Bhavanisagar dam
🎬 Watch Now: Feature Video


Published : Oct 8, 2023, 12:47 PM IST
ஈரோடு: காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில், பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டு அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்நிலையில், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் அணையில் நீர் இருப்பு குறைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் பவானிசாகர் அணையிலிருந்து, கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக 2,300 கன அடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக 600 கன அடி தண்ணீர் என மொத்தம் 2,900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதையடுத்து, பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பின் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இன்று (அக்.08) காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 69.57 அடியாகவும், நீர் இருப்பு 10.7 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 634 கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக 2,900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில், அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருவதால் பாசன பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.