திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது! - thirukarthigai deepam thiruvizha 2023
🎬 Watch Now: Feature Video
Published : Nov 26, 2023, 7:37 AM IST
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவ.17ஆம் தேதி 64 அடி உயர தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து 10 நாட்கள் பகலிலும் இரவிலும் என சுவாமிகள் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதன் தொடர்ச்சியாக பத்தாம் நாளாகிய இறுதி நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் கோயிலின் கருவறையின் முன்பு உள்ள மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
கோயிலின் கருவறையிலிருந்து ஒரு தீபம் எடுத்து வரப்பட்டு, கருவறை முன்புள்ள மண்டபத்தில் இருக்கும் ஐந்து விளக்குகளை ஏற்றி, பின்னர் ஐந்து விளக்கில் இருந்து ஒரு விளக்கு ஏற்றி, அதை பக்தர்களுக்கு காண்பிக்கப்பட்டது, இதுதான் பரணி தீபம் என கூறப்படுகிறது. இதன் தத்துவம் என்னவென்றால், ஏகன் அனேகன் ஆகி, அநேகன் ஏகன் ஆவது எனக் குறிப்பதாக உள்ளதாகும்.
இதற்காக இன்று அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, சரியாக 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக கோயிலுக்குள் சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இன்று மாலை சரியாக 6 மணிக்கு கோயிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியின் மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
இன்று ஏற்றப்படும் இந்த மகா தீபம் 11 நாட்களுக்குத் தொடர்ந்து எரியும். இதற்காக 4 ஆயிரத்து 500 கிலோ நெய் உபயோகப்படுத்தப்பட உள்ளது. 1,500 மீட்டர் காடா துணி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தீபத் திருவிழாவைக் காண்பதற்கு 35 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று மாவட்ட நிர்வாகம் எதிர்பார்க்கிறது. ஆகையால், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.