குற்றாலம் மெயின் அருவியில் குறையாத வெள்ளம்.. தொடர்ந்து 5வது நாளாகச் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை..!
🎬 Watch Now: Feature Video
Published : Dec 21, 2023, 5:05 PM IST
தென்காசி: தென்காசி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வந்த கனமழையால், குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. மேலும், அருவியில் தண்ணீர் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி சீறிப் பாய்ந்தது. இதனால் பாதுகாப்பு கருதிக் கடந்த 4 நாட்களாகச் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இன்றும் (டிச.21) அருவியில் தண்ணீர் வரத்து குறையாத காரணத்தினால் ஐந்தாவது நாளாகக் குளிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த காட்டாற்று வெள்ளம் காரணமாகக் குற்றால அருவிகளில் கல், மரப்பலகைகள், மணல் போன்றவை அடித்து வரப்பட்டன. இதனால், மெயின் அருவிப்பகுதியில் இருந்த சுற்றுச்சுவர், தரை கற்கள் ஆகியவை சேதமடைந்தன. இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிப்பதற்கு போலீசாரால் தடை விதிக்கப்பட்டது.
கடந்த டிச.16ஆம் தேதி விதிக்கப்பட்ட தடையானது வெள்ளப்பெருக்கு குறையாததால் தற்போது வரை மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று (டிச.21) 5வது நாளாகக் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது, குற்றாலம் ஐந்தருவியில் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஐந்தருவியை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.