ரூ.15,000 லஞ்சம் பெற்ற ஊராட்சி மன்ற தலைவர், செயலாளர் கைது! - ஐயங்கார் குளம்
🎬 Watch Now: Feature Video
காஞ்சிபுரம் ஐயங்கார் குளத்தில் அதிமுகவைச் சேர்ந்த வேண்டா சுந்தரமூர்த்தி என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றி வருகிறார். அதேநேரம் அங்கு ஊராட்சி மன்றச் செயலாளராக புவனா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் காஞ்சிபுரம் பாண்டவர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர், ஐயங்கார் குளம் பகுதியில் வீடு கட்டுவதற்காக வரைபட அனுமதி கோரி ஊராட்சி மன்றச் செயலாளர் புவனாவை அணுகி உள்ளார்.
ஆனால், புவனா அனுமதி அளிக்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளார். பின்னர், இது தொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவர் வேண்டா சுந்தரமூர்த்தியை தொடர்பு கொள்ளுமாறு புவனா அறிவுறுத்தி உள்ளார். இதன்படி, வரைபட அனுமதி அளிக்க ஊராட்சி மன்றத் தலைவர் வேண்டாவை அனுகியபோது, கிருஷ்ணமூர்த்தியிடம் 15,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருஷ்ணமூர்த்தி, காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வனிடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினரின் அறிவுறுத்தலின்படி, ஊராட்சி மன்றத் தலைவர் வேண்டா சுந்தரமூர்த்தி மற்றும் செயலாளர் புவனா ஆகியோரிடம் கிருஷ்ணமூர்த்தி 15,000 ரூபாய் லஞ்சப் பணத்தைக் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், வேண்டா சுந்தரமூர்த்தி மற்றும் புவனா ஆகிய இருவரையும் பிடித்தனர். தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.