thumbnail

13ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மாலை கும்பிடு விழா - கலைகட்டிய எருதோட்ட நிகழ்ச்சி!

By

Published : May 24, 2023, 10:35 PM IST

திண்டுக்கல்: நத்தம் கூவனூத்து அருகே கவராயபட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் குறிப்பிட்ட இரு வேறு சமூகத்தினரால் தொன்று தொட்டு வணங்கி வரும் ஸ்ரீ முத்ததாத்தன் திருக்கோயிலில் மாலை கும்பிடு விழா 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். 

சில காரணமாக கடந்த 13 ஆண்டுகளாக இந்த விழா நடத்தப்படவில்லை. 13 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு வெகு இத்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு திருவிழா கடந்த 16ம் தேதி சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான எருதோட்டம் நிகழ்ச்சி இன்று 24.05.2023 கோலாகலமாக நடைபெற்றது. 

முன்னதாக இவ்விழாவில் திருச்சி, கரூர், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆக்கல் நாயக்கர் மந்தை, நல்லதொப்பன் நாயக்கர் மந்தை, கோலாகா பிலி மந்தை, கோணத்தாத மந்தை, சின்னக்காட்டு பப்பிநாயக்கர் மந்தை, சின்னமன்னநாயக்கர் மந்தை, ராஜா கோடங்கி நாயக்கர் மந்தை உள்ளிட்ட 7 மந்தைகளில் இருந்து கொண்டு வரப்பட்ட வளர்ப்பு காளைகள் கோயில் முன்பாக கொண்டு வரப்பட்டன. 

பின்னர் நடைபெற்ற எருது சந்திப்பு நிகழ்ச்சியில் பாரம்பரிய முறையில் மந்தைகளிலிருந்து கொண்டு வரப்பட்ட காளைகளுக்கு மரியாதைகள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஊரிலிருந்து மூன்று கி.மீ., தொலைவில் உள்ள கொத்து கொம்புவிற்கு காளைகள் அனுப்பி வைக்கப்பட்டன. 

பின்னர், இந்த காளைகள் கொத்து கொம்புவில் இருந்து தோரண வாயிலை நோக்கி அவிழ்த்து விடப்பட்டது. இதில் முதலாவதாக வந்த காளைக்கு மஞ்சள் தூவி, எலுமிச்சை பழம் பரிசாக வழங்கப்பட்டது. இவ்விழாவில் தேனி, திண்டுக்கல், போடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியிலுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் விழாவை சிறப்பித்தனர். 

இதையும் படிங்க: ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்க அனுமதி? - போலீசாருக்கு புதிய உத்தரவு..

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.