மதுரை மீனாட்சியம்மன் அஷ்டமி சப்பர வீதி உலா - வடம் பிடித்திழுத்த பெண்கள்..! - ashtami chapparam
🎬 Watch Now: Feature Video
Published : Jan 4, 2024, 11:04 AM IST
மதுரை: ஆண்டுதோறும் திருவிழாவிற்கு பஞ்சமில்லாத மதுரை மாவட்டத்தில் பல்வேறு திருவிழாக்கள் நடந்த வண்ணம் உள்ளன. அந்தவகையில், உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பெண்கள் மட்டுமே அஷ்டமி சப்பரம் இழுக்கும் திருவிழா வெகு விமரிசையாக இன்று (ஜன.4) நடைபெற்றது. இதனிடையே, ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் இந்த சப்பர வீதி உலாவை கண்டுகளித்தனர்.
மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும், 12 மாதங்களும் திருவிழா நடைபெறுவது சிறப்பு. இதில் சித்திரை திருவிழா திருக்கல்யாண வைபவம், தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. அதே போன்று, மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று நகரின் வெளிவீதிகளில் நடைபெறும் அஷ்டமி சப்பர திருவிழாவும் புகழ் பெற்ற நிகழ்வாகும்.
இத்திருவிழா உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளந்த லீலையாகும். இந்த விழா நாளான இன்று சுந்தரேசுவரர் - பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் தனியாகவும், சப்பரங்களில் எழுந்தருளி, கீழமாசி வீதியில் இருந்து யானைக்கல், கீழவெளி வீதி, தெற்கு வெளிவீதி, கிரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, மேல வெளிவீதி, குட்ஷெட் தெரு, வக்கீல் புதுத்தெரு வழியாக கோயிலை அடைந்தது.
இதில் மீனாட்சி அம்மன் சப்பரத்தை பெண்கள் மட்டும் இழுத்து வருவது தனிச்சிறப்பாகும். அப்போது இறைவன் அனைத்து உயிர்களுக்கும் படியளப்பதை விளக்கும் விதமாக அரிசியை வீதிகளில் போட்டு வந்தனர். பக்தர்கள், கீழே சிதறி கிடக்கும் அந்த அரிசியை சேகரித்து, வீட்டில் வைத்து வேண்டிக் கொண்டால் அள்ள அள்ள அன்னம் கிடைத்து, பசி எனும் நோய் ஒழியும் என்பது நம்பிக்கை. அதனால் பொதுமக்கள் அரிசியை ஆர்வமுடன் சேகரித்து வழிபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.