28 ஆண்டுகளுக்குப் பின்பு நிரம்பிய ஏரி... கோவை அக்ரஹார சாமக்குளம் விவசாயிகள் மகிழ்ச்சி! - agraharasamakulam lake drone view
🎬 Watch Now: Feature Video
Published : Nov 14, 2023, 9:05 PM IST
கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் அடுத்த கோவில்பாளையம் அருகே உள்ள அக்ரஹார சாமக்குளம் பகுதியில் 165 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி நீண்ட நாட்களாகச் சீரமைக்கப்படாமல், புதர் மண்டி இருந்தது. இந்த ஏரியைக் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர், தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இணைந்து சுமார் 100 வாரங்களுக்கு மேலாகப் புனரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கீரணத்தம், காட்டம்பட்டி, கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததை அடுத்து, அக்ரஹார சாமக்குளம் பகுதியில் உள்ள ஏரிக்கு, சுற்றுவட்டாரப் பகுதியில் இருக்கும் 5 குளங்களிலிருந்து வரும் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
அதன் விளைவாக, சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு கோவில்பாளையம் அடுத்த அக்ரஹார சாமக்குளம் பகுதியில் இருக்கும் 165 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி முழுவதும் மழை நீரால் நிரம்பி காட்சி அளிக்கிறது. இதனால், சுற்றுவட்டாரப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் ஏரியைப் புனரமைத்த தன்னார்வலர்கள், விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.