நெல்லை நிகழ்ச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கோஷம்! - ondiveeran death anniversary
🎬 Watch Now: Feature Video
திருநெல்வேலி: நெல்லையில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரனின் 252-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதித்தமிழர் கட்சியினர் கோஷங்களை எழுப்பியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சுதந்திரப் போராட்ட வீரரான ஒண்டி வீரனின் 252-ஆவது நினைவு தினம் இன்று (20.08.2023) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக வருகைத் தந்தனர். அப்போது மணிமண்டபத்தின் முன்பு மாலை அணிவிப்பதற்காக நின்று கொண்டிருந்த ஆதித்தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பாஜகவினருக்குக் கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பத் தொடங்கினர்.
'இது பெரியார் மண் இது எங்கள் மண்' எனத் தொடர்ந்து கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அப்பகுதியில் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் ஆதி தமிழர் கட்சியினரை கோஷம் எழுப்ப விடாமல் தடுத்து நிறுத்தியதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து போலீசாரும், அண்ணாமலையின் பாதுகாப்புப் படை அதிகாரிகளும் அவரை காரில் பத்திரமாக ஏற்றி அனுப்பி வைத்தனர். பாஜகவினரும் எதிர் கோஷம் எழுப்பி ‘பாரத் மாதா கி ஜே’ எனக் கூறியதும், ஆதித்தமிழர் கட்சியினரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.