சிகரெட்டை நிறுத்தச் சொன்னவர் சரத்பாபு - ரஜினிகாந்த் நெகிழ்ச்சி - sarath babu latest news
🎬 Watch Now: Feature Video
சென்னை: தென்னிந்திய சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான சரத்பாபு, கடந்த ஒரு மாத காலமாக உடல் நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று (மே 22) தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் ஹைதராபாத்தில் உள்ள ஃபிலிம் சேம்பரில் வைக்கப்பட்டது.
தொடர்ந்து, இன்று (மே 23) காலை சென்னை கொண்டு வரப்பட்ட அவரது உடல், தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு சுஹாசினி மணிரத்னம், ஒய்.ஜி.மகேந்திரன், சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
அந்த வகையில், சரத்பாபு உடன் அண்ணாமலை, முத்து போன்ற பிளாக் பஸ்டர் திரைப்படங்களில் நடித்த ரஜினிகாந்த், நேரில் வந்து சரத்பாபுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், “நடிகர் ஆவதற்கு முன்பே சரத்பாபுவை எனக்குத் தெரியும். நாங்கள் நல்ல நண்பர்கள்.
அவர் எப்போதும் சிரித்த முகத்துடனே இருப்பார். நான் அவரை கோபப்பட்டு பார்த்ததே இல்லை. நான் சிகரெட் பிடிப்பதை நிறுத்தச் சொல்வார். நான் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் எனவும் கூறுவார்” எனத் தெரிவித்தார். மேலும், சரத்பாபுவின் உடலுக்கு இன்று மதியம் 2 மணியளவில் கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள தகன மேடையில் வைத்து இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.