கூடலூர் அருகே சிறுத்தை தாக்கி குழந்தை காயம்.. தீவிர முயற்சியில் வனத்துறையினர்! - முதுமலை
🎬 Watch Now: Feature Video
Published : Jan 6, 2024, 4:56 PM IST
நீலகிரி: கூடலூர் அருகே உள்ள கொளப்பள்ளி ஜேவியர் மட்டம் பகுதியில் கடந்த 4ஆம் தேதி, வசந்த் என்பவரது 4 வயது குழந்தை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, சிறுத்தை ஒன்று குழந்தையைத் தாக்கி உள்ளது. அப்போது, அருகில் இருந்தவர்கள் கூச்சலிடவே, சிறுத்தையிடம் இருந்து குழந்தை சிறு காயங்களுடன் காப்பாற்றப்பட்டுள்ளார். மேலும், ஏற்கனவே இதே பகுதியில் 3 பெண்களை சிறுத்தை தாக்கியது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, மனிதர்களை தாக்கி வரும் சிறுத்தையை பிடிக்கக்கோரி நேற்று (ஜன.05) பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, மாவட்ட வன அலுவலரின் பரிந்துரைப்படி, முதன்மைத் தலைமை வன உயிரின பாதுகாவலரிடம் அனுமதி பெற்று, சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது.
அந்த வகையில், முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையில், வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் சிறுத்தையை கண்காணித்து, மயக்க ஊசி செலுத்த தேடி வருகிறார்கள். இந்நிலையில், சிறுத்தை பிடிபடும்வரை பொதுமக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டிய சூழ்நிலை அப்பகுதியில் உருவாகி உள்ளது.