ஆடி பட்டம் தேடி விதை.. ஆடிப்பெருக்கை கோலாகலமாக கொண்டாடிய விவசாயிகள்!
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: தமிழகத்தில் விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில் அதிகம் நடக்கும் மாவட்டங்களுள் ஒன்று, திருவண்ணாமலை. அதிலும் குறிப்பாக கீழ்பென்னாத்தூர் தாலுகா சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சார்ந்த விவசாயிகள் நெல் சாகுபடியில் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்மாதம் ஆடி 18ஆம் தேதியான இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பாரம்பரியமாக விவசாயிகள் தங்கள் நிலத்தில் நெல் விதைப்புக்கு முன்பு பச்சரிசி, கடலை, வெல்லம் உள்ளிட்டவைகளை கலந்து, அதை இறைவனுக்கு படையல் இட்டு சிறப்பு வழிபாட்டுடன் நெல் விதைக்கும் பணியில் ஈடுபடுவார்கள்.
அந்த வைகையில் கீழ்பென்னாத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான மங்கலம், அணுகுமலை, ஓலைப்பாடி, நாரையூர், வேடந்தவாடி, பூதமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் இந்த சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆடி 18அன்று நெல் விதை விதைக்கப்பட்டு, பின் நாற்று நட்டு, தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளன்று நெல் அறுவடை நல்லபடியாக செய்ய நம்பிக்கையோடு விவசாயிகள் மகிழ்ச்சியோடு நெல் விதைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.