அம்மாபேட்டையில் ஆடித்திருவிழா வண்டி வேடிக்கை நிகழ்ச்சி கோலாகலம்; கடவுள் வேடமிட்டு வந்த பக்தர்கள் - salem news
🎬 Watch Now: Feature Video
சேலம்: அம்மாபேட்டையில் ஆடித்திருவிழாவை ஒட்டி வண்டி வேடிக்கை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதனை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடித் திருவிழா சிறப்பாக நடத்தப்படும்.
இந்த ஆண்டும் திருவிழாவில் பூச்சாட்டுதல், சக்தி அழைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தன. இதனை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட் 11ஆம் தேதி) இரவு நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட வண்டிகளில் கடவுள் வேடம் அணிந்தவர்கள் ஊர்வலமாக வந்தனர். சிவசக்தி நண்பர்கள் குழு சார்பில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 5 தலை நாகம் மீது விஷ்ணு அமர்ந்தவாறு வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.
இதை பார்த்து பக்தர்கள் விஷ்ணுவை நேரில் பார்த்தது போன்று ரசித்து வணங்கினர். பக்தர்களும் கண்ணன் ராதை வேடம் அணிந்தவர்களை பார்த்து ரசித்தனர். லட்சுமி, விநாயகர், சரஸ்வதி ஆகிய கடவுள்களின் அலங்காரங்கள் சிறப்பாக இருந்தது.
மேலும் சிங்கத்தின் மேல் காளியம்மன், அதன் இரு புறங்களிலும் சமயபுரம் மாரியம்மன், வராஹி அம்மன் ஆகிய வேடங்கள் அணிந்து வந்தது சிறப்பாக இருந்தது. விழாவை ஒட்டி அம்மாபேட்டை மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்து அணிவகுத்து வந்த அலங்கார வண்டிகள் கோயில் முன்பு வந்தடைந்தன.
இந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர். இதனால் கோயிலை சுற்றி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க நள்ளிரவு வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.