"எல்லா அதிகாரியும் நம்ம கையில" - வைரலாகும் மணல் கடத்தல் கவுன்சிலர் வீடியோ!
வேலூர்: அணைக்கட்டு அருகே உள்ள கெங்கநல்லூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக இருப்பவர் மகாலிங்கம். இவர் அப்பகுதியில் உள்ள மண், மணல், கிராவல் மண் ஆகியவற்றை சட்ட விரோதமாக கடத்தி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனைத் அடுத்து, அதிகாரிகள் பலமுறை அவரது வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
ஆனால், அவர் தன்னை அதிகாரிகளால் எதுவும் செய்ய முடியாது என்றும், அவர்களுக்கு அதிக பணம் கொடுப்பதால் தன் பக்கம் அதிகாரிகள் வழுவாக இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும், மகாலிங்கம் மணல் கடத்துவது குறித்து எவரேனும் காவல்துறைக்கு புகார் அளித்தால், அங்கு சோதனைக்கு வரும் முன்பே போலீஸ் அவருக்கு தகவல் தெரிவித்து விடுவதாகவும் இதனால், அவர் அனைத்தையும் சரி செய்துவிட்டு வண்டியை அங்கிருந்து எடுத்து சென்றுவிடுவதாகவும் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
மேலும் அதிமுக, பாமக, விசிக ஆகிய அனைத்து கட்சிக் காரர்களுக்கும், நான் தான் மறைமுகமாக பணம் கொடுத்து வருகின்றேன் என்றும் எம்.எல்.ஏ உட்பட கிழக்கு, மத்தியம், மேற்கு ஆகிய அனைத்து ஒன்றிய கவுன்சிலர்களும் என் வாகனத்தை பிடிக்கச் சொல்வார்கள் என்றும் ஆனால் நான் அதிக பணம் கொடுப்பதால் அதிகாரிகள் அனைவரும் என் பக்கம் இருக்கிறார்கள், இதனால் என்னை பிடிக்க முடியவில்லை என்று அவர் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: இறைச்சிக்காக கண்டெய்னரில் 30 எருமைகள் கடத்தல்? - கரூரில் தமிழ் இந்து முன்னணி நிர்வாகிகள் அதிரடி ஆக்ஷன்!